ஹால்மார்க் பிரத்யேக அடையாள எண் (HUID) எண் இல்லாமல் தங்க நகைகள் மற்றும் தங்க கலைப்பொருட்கள் விற்பனை ஏப்ரல் 1 முதல் நாட்டில் அனுமதிக்கப்படாது என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் நிதி காரே செய்தியாளர்களிடம் பேசுகையில், “நுகர்வோர் நலன் கருதி 2023 மார்ச் 31க்குப் பிறகு HUID இல்லாமல் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகள் மற்றும் தங்க கலைப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
HUID என்பது எண்கள் மற்றும் எழுத்துக்களைக் கொண்ட தனித்துவமான 6 இலக்க எண்ணெழுத்து குறியீடாகும். அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஹால்மார்க் செய்யும் நேரத்தில் ஒவ்வொரு நகைக்கும் HUID வழங்கப்படும், மேலும் இது ஒவ்வொரு நகைக்கும் தனித்துவமானது.